ஆனைமலை ஆழியாற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

ஆனைமலை ஆழியாற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்றுவது எப்போது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Update: 2023-03-15 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஆழியாற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்றுவது எப்போது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனைமலை ஆழியாறு

ஆனைமலை அருகே ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் கோட்டூர் ஆனைமலை, அம்பராம்பாளையம், மணக்கடவு வழியாக ஆழியாற்றில் 34 கிலோ மீட்டர் பயணித்து கேரளாவை சென்றடைகிறது.

இந்த ஆழியாற்றில் பாலாறு உள்பட பல சிற்றாறுகள் கலக்கின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் இந்த ஆறு முக்கிய ஆறாக கருதப்படுகிறது.

ஆழியாறு அணை அருகே ஆழியாற்றில் இருந்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டம், மயிலாடுதுறை கூட்டு குடிநீர் திட்டம், ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆழியாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதால், வற்றாத ஜீவ நதியாக திகழ்ந்து வருகிறது.

ஆகாயத்தாமரை

இந்த நிலையில் ஆழியாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து மிகவும் மோசமாக நிலையில் காணப்படுகின்றன. மேலும் சிலர் ஆழியாற்றில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இதுதவிர ஆனைமலை பகுதியில் உள்ள கழிவுநீரும் ஆழியாற்றில் தான் கலக்கிறது. இதனால் ஆழியாற்றின் தண்ணீர் மாசு அடைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ஆழியாற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்

ஆனைமலையில் உள்ள ஆழியாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்கிறது. இந்த ஆழியாற்றில் ஆனைமலை பகுதியில் மட்டும் இருந்து சுமார் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் கழிவுகளை ஆற்றில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஆற்று நீர் மாசுபடுவதுடன், இந்த நீரை குடிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுதவிர ஆழியாற்றை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து பச்சைபசேலென காட்சியளிக்கிறது. இதனால் பாலத்தில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் ஆகாயத்தாமரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. ஆனால் வேகமாக ஆகாயத்தாமரை வளர்ந்து விட்டது. இதனால் அழகான ஆறு, அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே போர்க்கால அடிப்படையில் துரிதமாக பணிகளை மேற்கொண்டு, ஆகாயத்தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்