ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
தேனியில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தமிழக சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக முற்போக்கு கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.