ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை - திண்டுக்கல் லியோனி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை என திண்டுக்கல் லியோனி கூறினார்.;

Update:2023-02-10 02:32 IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் நேற்று கள்ளுக்கடை மேடு, முனிசிபல்காலனி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது திண்டுக்கல் லியோனி பேசும்போது கூறியதாவது:-

பெரியார் பிறந்த ஈரோடு எப்போது தி.மு.க.வோடு தான் இருந்து வருகிறது. பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதை, தன்மானம் காக்க பிரசாரம் செய்தார். அந்த பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று நம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெறச்செய்வது நம் அனைவரின் கடமை.

அ.தி.மு.க. என்ற கட்சியின் செயல்பாடு இன்று கோர்ட்டில் தான் நடந்து கொண்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாப நிலையில் உள்ளனர். தி.மு.க.வை நோக்கி மெல்ல வரத்தொடங்கிவிட்டனர். தி.மு.க. கொட்டும் மழையில் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு ஆட்சி தி.மு.க. ஆட்சியாகும். அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் கடந்த 21 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்