பெரம்பலூரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சங்கு ஒலிப்பான் மீண்டும் ஒலிக்க தொடங்கியது
பெரம்பலூரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சங்கு ஒலிப்பான் மீண்டும் ஒலிக்க தொடங்கியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சங்கு ஒலிப்பான்
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் பஸ் நிலையங்களில் மணிக்கூண்டு நிறுவப்பட்டிருக்கும். முந்தைய காலத்தில் கடிகாரத்தின் பயன்பாடு அவ்வளவாக இல்லாத காலத்தில் வெளியூர் பயணிக்கும் பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், நடத்துனர்களுக்கும், டைம் கீப்பர் என்ற பணியில் உள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் உதவியாக இருந்துள்ளது. அந்த அடிப்படையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் அடையாளமாய் திகழ்ந்தது சங்கு ஒலிப்பான். அதனாலேயே சங்குப்பேட்டை என்ற ஒரு பகுதியே அதன் பெயரை ஒட்டி உருவானது.
தற்போது வளர்ந்த நிலையில் உள்ள பெரம்பலூர் நகரம், ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழ்நாட்டிலேயே பெரிய தாலுகா தலைநகராகவும், பேரூராட்சி அந்தஸ்திலும் இருந்துள்ளது. பழைய தாலுகா பகுதியே இப்போது பெரம்பலூர் மாவட்டமாக இருந்தது.
எச்சரிக்கை செய்வதற்காக...
அப்போதைய பெரம்பலூர் பேரூராட்சி பகுதியை சுற்றிலும் வயல்காடுகளும், அரிசி ஆலைகள், செக்கு மில்கள், கல்குவாரிகள் அதிகளவில் இருந்தன. வயல்வேலைக்கு செல்லும் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மில்களில் வேலை செய்யும் இதர தொழிலாளர்கள், கடை ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்களுக்கு நேரம் தெரிவதற்காக சங்கு ஒலிக்க செய்யப்பட்டது.
பெரம்பலூர் சங்கு ஒலிப்பானுக்கு ஒரு பாரம்பரியமும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் பெரம்பலூரில் ஏதேனும் தீவிபத்து அல்லது இடர்பாடுகள் நேரிட்டால் அதனை தெரிவித்து எச்சரிக்கை செய்வதற்காகவும் சங்கு ஒலிப்பான் பயன்பட்டது.
மீண்டும் ஒலிக்க தொடங்கியது
நாளடைவில் அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியினால், கடிகாரங்கள், செல்போன் பயன்பாடுகள் என வளர்ந்து விட்டப்படியால், பெரம்பலூரில் இயங்கி வந்த சங்கு நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சங்குப்பேட்டை சிக்னல் அருகே ஊரின் நடுவே நிறுவப்பட்டிருந்த சங்கு கோபுரம் அங்கிருந்து பிரித்து எடுக்கப்பட்டு, எளம்பலூர் சாலையில், ராமுபிள்ளை காலனி முகப்பு பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே பல ஆண்டுக்கு முன்பு நிறுவப்பட்டது.
பெரம்பலூரின் சங்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இயங்காமலேயே இருந்து வந்தது. தற்போது சங்கை மீண்டும் ஒலிக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில தினங்களாக காலை 9 மணி, 12 மணி, மதியம் 3 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் ஒரு நிமிடம் சங்கு ஒலிக்க செய்யப்படுகிறது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சங்கு ஒலிக்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், பெரம்பலூரின் பழமை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும், முன்பெல்லாம் சங்கு ஒலிக்க வைத்தால் ஏறத்தாழ 6 கிலோ மீட்டர் வரை சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டது. தற்போது 4 கி.மீ. வரையே சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. இதற்கு காரணம் சங்குப்பேட்டை பகுதியில் சங்கு இருந்தபோது அதிக உயரத்தில் சங்கு கோபுரம் நிறுவப்பட்டிருந்தது.
தற்போது எளம்பலூர் சாலையில் மாற்றி அமைக்கப்பட்ட சங்குகோபுரம் பழைய கோபுரத்தின் உயரத்தில் 70 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும், சங்கு ஒலிப்பான் கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.