திற்பரப்பு அருவியில் 16 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 16 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2022-11-14 20:57 GMT

திருவட்டார்:

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 16 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மழை

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆரல்வாய் மொழி, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை என மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து உள்ள கோதையாறு, மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையாக இருந்தது.

நாகர்கோவிலில் பெய்த மழையின் காரணமாக மாநகரில் வடசேரி அசம்பு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகள் தோண்டப்பட்ட நிலையில் தற்போது சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள். பள்ளிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. பின்னர் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் தொடர்ந்து 16 நாட்கள் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குளிக்க அனுமதி

இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று முதல் அருவியின் 3 இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் குறைந்த அளவிலான பயணிகளே வந்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று அங்கு அடிக்கடி சாரல் மழை பெய்ததால் அந்த பகுதி குளு குளு சீசனாக இருந்தது. மாத்தூர் தொட்டிப் பாலத்திலும் மழையின் காரணமாக குறைவான அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டனர்.

கோழிப்போர்விளையில் 55.2 மி.மீ. பதிவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:

பேச்சிப்பாறை அணை- 1, பெருஞ்சாணி அணை- 1.4, சிற்றார்-1 அணை- 4, புத்தன் அணை- 1, களியல்- 31, கன்னிமார்- 18.2, குழித்துறை- 21, நாகர்கோவில்- 3.6, தக்கலை- 16.4, குளச்சல்- 18.4, இரணியல்- 42, பாலமோர்- 7.4, திற்பரப்பு- 16.4, ஆரல்வாய்மொழி- 3, அடையாமடை- 18, குருந்தங்கோடு- 36.2, முள்ளங்கினாவிளை- 32.8, ஆனைக்கிடங்கு- 2.2 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இதில் ஆதிகபட்சமாக கோழிப்போர்விளை பகுதியில் 55.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

அணைகளின் நீர்வரத்து

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 529 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 232 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 304 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 3 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.6 கன அடி தண்ணீரும் வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்