தேரின் 2 சக்கரங்கள் போல் வக்கீல்களும், நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி

தேரின் 2 சக்கரங்கள் போல் வக்கீல்களும், நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினர்.

Update: 2022-07-03 13:03 GMT

சேலம்,

சேலம் கோர்ட்டு வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் வணிகவியல் கோர்ட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி வரவேற்றுப்பேசினார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் வணிகவியல் கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகிறது. இந்த வணிகவியல் கோர்ட்டு மூலம் உடனடி தீர்வு கிடைக்கும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால் தான் வணிகவியல் கோர்ட்டுகள் திறக்கப்பட்டு வரப்படுகிறது.

தேரின் 2 சக்கரங்கள் போல் வக்கீல்களும், நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது வணிகர்கள், பொதுமக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்