அ.தி.மு.க. விஷயத்தில் தலையிட மாட்டேன் -டி.டி.வி. தினகரன் பேட்டி

அ.தி.மு.க. அழிந்து வருவதை பார்த்து வருத்தப்படத்தான் முடியும் என்றும், இன்னொரு கட்சி விஷயத்தில் தலையிடமாட்டேன் என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Update: 2022-06-30 21:48 GMT

சென்னை,

அ.ம.மு.க. தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார்.

ஆலோசனையில் நிர்வாகிகள் மத்தியில் டி.டி.வி.தினகரன் காரசாரமாக பேசியதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அழிவதைப் பார்த்து

நாங்கள் அ.தி.மு.க.வில் இருந்து வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க.வின் சிங்கங்கள் (தொண்டர்கள்) எல்லாம் எங்கள் பக்கம் வந்துவிட்டார்கள். அங்கு இருப்பவர்கள் எல்லாம், அசிங்கங்கள்தான். சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூத்து அனைவருக்கும் தெரியும்.

அ.ம.மு.க. ஜனநாயக முறைப்படி, தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். நாங்கள் ஜெயலலிதாவின் சிங்கக்குட்டிகள். நாங்கள் நரிக்கூட்டத்தில் சேர விரும்பமாட்டோம். இன்னொரு (அ.தி.மு.க.) கட்சி விஷயத்தில் நான் தலையிடமாட்டேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அ.தி.மு.க.வில் மிச்சம் மீதி இருந்தால், அவர்கள் எங்களிடம் வாருங்கள். அதைத்தான் சொல்ல முடியும். அ.தி.மு.க. அழிந்து வருவதை பார்த்து வருத்தப்படத்தான் முடியும். ஆனால் இதை தி.மு.க. சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

எம்.ஜி.ஆரின் தீர்க்கதரிசனம்

அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியாதா? என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். நான் கிருஷ்ணபரமாத்மா இல்லை என்றும், தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு தவறானவர்கள் கையில் பெரும்பான்மையை வைத்து கொடுத்துவிட்டது என்று அவர்களிடம் சொன்னேன்.

நிர்வாகிகளின் பெரும்பான்மையை வைத்து கட்சி கிடையாது. தலைமை பதவி தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்று எம்.ஜி.ஆரே தன் உயிலில் சொல்லியிருக்கிறார். நிர்வாகிகளை யார் வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ள முடியும் என்று தீர்க்கதரிசனத்தோடு அன்றே சொல்லியுள்ளார்.

அ.தி.மு.க.வில் பா.ஜ.க.வின் தலையீடு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். மத்திய-மாநில அரசுகள் தவறுகள் செய்தால் அதை சுட்டிக்காட்டுவேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, 2023-ம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் சரியான நிலைப்பாட்டை எடுப்போம். தேர்தலில் யாருக்கு எங்கள் ஆதரவு என்பதை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்