'இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்'
இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று வடமதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
வடமதுரையில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு வடமதுரை நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். தனது திரைப்பட வசனங்கள், பாடல்கள் மூலமாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி, ஆட்சியை பிடித்து மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தார். அ.தி.மு.க கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் தி.மு.க. ஆட்சி வந்து 20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் சுமை அதிகரித்துள்ளது. தி.மு.க. அரசு மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்து வருகிறது. தி.மு.க ஆட்சி அமைய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே காரணம். ஆனால் அவர்களே தற்போது தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராடி வருகின்றனர். இனி எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன் (கிழக்கு), தண்டாயுதம் (மேற்கு), அய்யலூர் நகர செயலாளர் ராகுல்பாபா, அ.தி.மு.க. தலைமை பேச்சாளர்கள் பாரிஸ் ராஜா, சிவசண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.