அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி உள்ளது - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்;

Update: 2023-06-23 20:04 GMT

எடப்பாடி:-

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அ.தி.மு.க. கொடிேயற்று விழா

எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா நடந்தது. செட்டிமாங்குறிச்சி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மாதாஸ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

பள்ளிகள் தரம் உயர்வு

அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பகுதியில் பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பி.எட். கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் தற்போது ஏழை, எளிய மாணவ- மாணவிகள் படித்து பயன்பெற்று வருகின்றனர்.

அதேபோன்று நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல் அந்த பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு

ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்ட இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி உள்ளது. நீட் தேர்வு ரத்து என்று கூறிய தேர்தல் வாக்குறுதி இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் இன்று ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படித்து வருகின்றனர்.

மேட்டூர் உபரி நீரை கொண்டு 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் புதிய பாசன திட்டம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதவிர அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த குடிமராமத்து பணி, அம்மா மினிகிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் போலி மது, கள்ளச்சாராயம் உள்ளிட்டவை விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளின் கேள்விகள் சட்டசபை நேரலை நிகழ்ச்சிகளில் மறைக்கப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்ற ஆணை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மாற்றுகட்சியினர்...

தொடர்ந்து எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருப்பாளி, ஆடையூர், பக்கநாடு, பூலாம்பட்டி, சித்தூர், கள்ளுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது மாற்றுக்கட்சியினர் ஏராளமானவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் எடப்பாடி ஒன்றிய பகுதியில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்