அ.தி.மு.க.வினர் அலை கடலென திரண்டு வந்து பங்கேற்க வேண்டும்
மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெற உள்ள போராட்டத்துக்கு அ.தி.மு.க.வினர் அலைகடலென பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பழனியில் நாளை மறுநாள் (நாளை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலை கடலென திரண்டு வந்து பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். எனவே மக்கள் நம்பிக்கைய இழந்த தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக மக்களுடன் இணைந்து அ.தி.மு.க.வினரும் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் விஜயபாலமுருகன், சந்திரா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், சின்னச்சாமி, மயில்சாமி, யாகப்பன், நல்லதம்பி, மோகன், பாண்டியன், பசும்பொன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜ்மோகன், மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாணவர் அணி செயலாளர் கோபி, தொழிற்சங்க செயலாளர் முத்தையா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.