விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சி அமைப்பு செயலாளருமான செம்மலை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி ராஜாராம், ஒன்றிய செயலாளர் நத்தக்காடு கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.