தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-12-02 07:55 GMT

கோவை,

மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி கோவை சிவானந்தா காலனியில் இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், எதி்ர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. மீதான அவதூறு பிரசாரத்தை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க இயக்கத்தை பற்றி பேசுவதற்கும் தகுதி வேண்டும்.

ஒரே நேரத்தில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும். மாதந்தோறும் சிலிண்டர், கட்டுமான பொருட்கள் அத்தியவாசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வேண்டுமேன்றெ பொய் வழக்கு போடுகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்த என்னுடன் பேச நீங்கள் தயாரா? இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் வாகனத்தை இங்கு நிறுத்தினார்கள். அந்த வாகனத்தை திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 9-ந்தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 12-ந்தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும். அதேபோன்று வருகிற 13-ந்தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்