'கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்... கல் தான் காணாமல் போகும்' - ஜெயக்குமார்

கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2023-03-08 12:14 GMT

சென்னை,

அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.

இந்தசூழ்நிலையில், அண்ணாமலை நேற்று தனது பேட்டியில், பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்' என்று கூறி அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறினார். அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி முறியலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மா (ஜெயலலிதா) எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா (கருணாநிதி) எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்று தான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல. அதிமுக ஒரு பெரும் சமுத்திரம். அதில் வந்து கல் வீசினால் கல் தான் காணாமல் போகும் ஆனால் சமுத்திரம் பெரிய அளவில் இருந்துகொண்டு தான் இருக்கும். அலைகள் அடித்துக்கொண்டு தான் இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இன்று மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பலர் விருப்பப்பட்டு சேர்கின்றனர்.

விருப்பப்பட்டு சேரும்போதும் அதை அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. அது அண்ணாமலைக்கும் இருக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்