மணல்மேடு பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா
தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மணல்மேடு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க. உறுப்பினர்கள் 3 பேர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல்மேடு:
தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மணல்மேடு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க. உறுப்பினர்கள் 3 பேர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி மன்ற கூட்டம்
மணல்மேடு பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த கண்மணி அறிவடிவழகன் செயல்பட்டு வருகிறார். தி.மு.க.வை சேர்ந்த 8 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 5 உறுப்பினர்களும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் மணல்மேடு பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மதன் பாண்டியன், செல்வி, லதா ஆகியோர் குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே சாலை குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது.
தர்ணா போராட்டம்
பொது நிதியிலிருந்து செய்யப்படும் பணிகளை பேரூராட்சித் தலைவர் தனது வார்டுக்கு ஒதுக்கி கொள்வதாகவும், தங்களது வார்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு கூட தராமல் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி தலைவருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
இதை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்களான ரகுவரன், கணேசமூர்த்தி, சாவித்திரி ஆகிய 3 பேரும் தங்களது வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக கூறி பேரூராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.