சேரன்மாதேவியில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, சேரன்மாதேவியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 337 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவி:
சாலை விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, சேரன்மாதேவியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 337 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை விரிவாக்க பணிகள்
சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ், திருச்செந்தூர்- பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளில் திட்ட பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு, 7 மீட்டர் அகல சாலையை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எந்த பணிகளும் நடைபெறாமல் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையை கருத்தில் கொண்டு, அம்பை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா தலைமையில், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பணிகளை விரைவுப்படுத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.
உண்ணாவிரதம்
ஆனாலும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் முன்பு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆவின் சேர்மன் சுதாபரசிவம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் சேரன்மாதேவி மாரிசெல்வம், அம்பை விஜயபாலாஜி, பாளையங்கோட்டை தெற்கு முத்துக்குட்டி பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், நகர செயலாளர் சேரன்மாதேவி பழனிகுமார், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, அம்பை நகராட்சி கவுன்சிலர் மாரிமுத்து, சேரன்மாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
337 பேர் கைது
தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக 47 பெண்கள் உள்பட 337 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்து, வாகனங்களில் ஏற்றி சென்று, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கும் அ.தி.மு.க.வினர் மாலை வரையிலும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.
முன்னதாக இந்த போராட்டத்துக்கு சேரன்மாதேவி தொழில் வர்த்தக சங்கத்தினர் ஆதரவை தெரிவித்தனர்.