மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்-அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக கூறி சேலத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-02 21:52 GMT

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா ஆகியோர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் எந்த அரசு விழாவுக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ஜெய்சங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி), சித்ரா (ஏற்காடு) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும், மக்கள் பிரதிநிதி இல்லாத தி.மு.க. நிர்வாகிகள் தலைமையேற்று இந்த அரசு விழாக்களை நடத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் நல்லதம்பி எம்.எல்.ஏ.வின் சொந்த ஊரில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னதுரை தலைமை தாங்கி பூமி பூஜை செய்துள்ளார்.

தர்ணா போராட்டம்

இதை கண்டிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, ஜெய்சங்கரன், சித்ரா மற்றும் தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி ஆகியோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட திட்ட அலுவலர் பாலச்சந்திரன் அலுவலக அறைக்கு சென்று, அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் கூறும் போது, தங்களது தொகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கும், திட்ட பணிகளுக்கு தொடக்க நிகழ்ச்சியான பூமி பூஜை போன்ற எந்த விழாக்களுக்கும் எங்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை, எங்களை புறக்கணிக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளுக்கான பதவியில் இல்லாத தி.மு.க. நிர்வாகிகளை வைத்து அரசு விழாக்கள் நடத்தப்படுகிறது. இது வாக்களித்த மக்களையும், எங்களையும் அவமதிக்கும் செயலாகும் என்றனர்.

பேச்சுவார்த்தை

உடனடியாக திட்ட அலுவலர் பாலச்சந்திரன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்