முன்னாள் அமைச்சர் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளர் கடத்தல்

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்க சென்றபோது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தி சென்றது. இதையடுத்து கடும் மோதலுக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்தது.

Update: 2022-12-19 23:14 GMT

கரூர்,

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமபலத்துடன் உள்ளன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். காலியாகவுள்ள துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் சில காரணங்களால் 6 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதன் முடிவை அறிவிக்கக்கூடாது என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து நேற்று மதியம் துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் திருவிகாவும், தி.மு.க. சார்பில் தேன்மொழி என்பவரும் போட்டியிட்டனர்.

காரை மறித்த மர்மகும்பல்

இதற்கிடையே திருவிகா உள்பட அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 6 பேரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் நாளான நேற்று திண்டுக்கல்லில் இருந்து மாவட்ட கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் கரூர் நோக்கி சென்றார். அவர்களது கார் மதியம் 12 மணி அளவில் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் அய்யனார் நகர் மேம்பாலம் பகுதியில் வந்தது. அப்போது திடீரென்று எதிரே 4 கார்களில் வந்த 20 பேர் கொண்ட மர்மகும்பல் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை வழிமறித்தது.

மேலும் அவர்கள் சாலையில் திராவக பாட்டில்களை போட்டு உடைத்தனர். இதனை பார்த்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அச்சம் அடைந்தனர்.

வேட்பாளர் கடத்தல்

இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்த 2 பேர், திடீரென்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில், காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் காரில் வந்த வேட்பாளர் திருவிகாவை காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேடசந்தூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட கவுன்சிலரை கடத்திய கும்பல் குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தள்ளுமுள்ளு - வாக்குவாதம்

இதற்கிடையே மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்த கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

அப்போது திரண்டிருந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாட்டில்கள், செருப்புகள் வீச்சு

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்ேபாது 2 தரப்பினரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து கேட்டை திறக்க வலியுறுத்தி கூச்சலிட்டனர்.

இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் பாட்டில் மற்றும் செருப்புகளை மாறி, மாறி வீசி கொண்டனர்.

கார் கண்ணாடி சேதம்

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, தி.மு.க., அ.தி.மு.க. என இருதரப்பினரையும் தனித்தனியாக போலீசார் கயிறு மூலம் வளையத்திற்கு தடுத்து நிறுத்தி வைத்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்களிக்க மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்குள் நுழைந்தனர்.

அப்போது கூட்ட நெரிசலில் அவர்களது கார் கண்ணாடி லேசாக உடைந்தது. இதனையடுத்து ேபாலீசார் அ.தி.மு.க. கவுன்சிலர்களை மாற்றுப்பாதையில் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

தேர்தல் நடந்து முடிந்தது

இதனையடுத்து மதியம் 2.30 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் மற்றும் அதிகாரிகள் ேதர்தல் நடத்தும் அறைக்கு வந்தனர். அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் அடுத்தடுத்து தேர்தல் அறைக்கு வந்தனர். பின்னர் தேர்தல் நடந்தது. இதையடுத்து மதியம் 3.30 மணிக்கு தேர்தல் முடிந்தது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

அதே சமயம் வெளியே வந்த தி.மு.க. கவுன்சிலர் தேன்மொழி கூறுகையில், 'எனக்கு 7 வாக்குகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலருக்கு 4 வாக்குகளும் கிடைத்துள்ளது' என்றார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், 'தி.மு.க.வினர் நேர்மையாக தேர்தலை சந்திக்க வழியின்றி குறுக்கு வழியில் பதவியை பிடிக்க இதுபோன்று அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்