சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.தி.மு.க. என்றும் திகழும் -எடப்பாடி பழனிசாமி பேச்சு

சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாய், உற்ற தோழனாய் அ.தி.மு.க. என்றுமே திகழும் என இப்தார் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-04-16 23:44 GMT

சென்னை,

அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்கி சிறப்புரையாற்றினார். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்புரையாற்றினார்.

ஆற்காடு இளவரசர் முகமது அலி, அவரது மகன் நவாப் ஷதா முகமது ஆசிப் அலி, அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ரகீம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் எம்.எப்.தமீம், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக்தாவூத், இமான்கள் முகமது உமர் பரூக் பிலாலி ஹல்ரத், மவுலானா குலாம் இஸ்மாயில் மெஹ்டிகான் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம், பச்சைமால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உறவை தகர்க்க முடியாது

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டு காலமாக கட்சியை அனைத்து மக்களுக்குமான இயக்கமாக உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் காட்டிய வழியிலேயே நானும் செயல்பட்டு வருகிறேன்.

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் விளங்கும். இஸ்லாமிய மக்களுடனான, அ.தி.மு.க.வின் பாசமிகு உறவை, எப்போதும் யாராலும் தகர்க்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் சிறுபான்மை மக்களின் நலன் பேணப்பட்டிருக்கிறது.

புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001-ம் ஆண்டு ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. எனது தலைமையிலான ஆட்சியில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது.

ஏமாற்றுகிற இயக்கமல்ல...

வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ஜெயலலிதாவால் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2018-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திய நிலையில், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஹஜ் புனித பயணத்திற்கு ரூ.6 கோடியை மாநில அரசு மானியமாக வழங்கியது. 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இந்த மானியத்தொகையை ரூ.12 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

ஒருசில கட்சிகளைப் போல சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கவர்ச்சிகரமாக பேசி, பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிற இயக்கமல்ல அ.தி.மு.க. உங்களோடு உண்மையான அன்போடு, உரிமையோடு, உணர்வோடு தோள் கொடுக்கின்ற இயக்கம் தான் அ.தி.மு.க.

கொள்கை வேறு; கூட்டணி வேறு

எங்களது கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது ஒருவரது இனிஷியலைப் போன்றது. அதை யாராலும் மாற்ற முடியாது. எங்களது இனிஷியல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்தது. அந்த வழியில் சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாய், உற்ற தோழனாய் அ.தி.மு.க. என்றுமே திகழும்.

கூட்டணி என்பது அவ்வப்போது அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல ஏற்படுத்துவது. கூட்டணி கட்சிகளின் கொள்கையை ஏற்பது அல்ல. அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கைப்படி தான் எப்போதும் நாங்கள் செயல்படுவோம். எனவே சிறுபான்மை மக்களின் உண்மை பாதுகாவலர்களாக நாங்கள் உங்களோடு என்றென்றைக்கும் உறவாக நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்