தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் - தமிழ் மகன் உசேன்
தமிழகத்தில் உள்ள 68 தர்க்காகளில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்-அமைச்சாராக வேண்டும் என பிராத்தனை செய்ய உள்ளேன் என்றும் கூறினார்.
சிவகாசி,
சிவகாசியில் உள்ள முத்துல்லாஷா தர்க்காவில் நடைபெற்ற பிராத்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் பேசியதாவது,
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது தனிகட்சி தொடங்க வேண்டும் என்று 11 பேர் கையெழுத்து போட்டு கொடுத்தோம். அதில் 4-வது கையெழுத்து நான் போட்டது. அது ரத்த கையெழுத்து. தமிழகத்தில் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தந்தார். இந்திய துணை கண்டத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஒரு இஸ்லாமியருக்கு கொடுத்தது இல்லை.
ஆனால் அ.தி.மு.க. அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளது. அந்த வரலாற்றை உருவாக்கிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியை சேரும். எடப்பாடி பழனிச்சாமி 68 வயது கடந்து விட்டார். அதனை குறிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 68 தர்க்காகளில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என பிராத்தனை செய்ய உள்ளேன்.
அதற்காகத்தான் இன்று சிவகாசி வந்துள்ளேன். நிச்சயமாக அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். இந்த பகுதி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தற்போது அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக உள்ளார். அவர் அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று அமைச்சராக மீண்டும் பொறுப்பு ஏற்று இப்பகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவார். இவ்வாறு அவர் பேசினார்.