தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்

Update: 2023-05-30 17:03 GMT


தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்று அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. பேசினார்.

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க பல்லடம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் 63 வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பரமசிவம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.

கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்களை வளர்த்தெடுத்தவர் வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி. அ.தி.மு.க. அதிக தொண்டர்களை கொண்ட கட்சி. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டை ஆள முடியும் என நிரூபித்தவர் எடப்பாடியார். சாதாரண கிளைச்செயலாளராக இருந்து முதல்- அமைச்சராக உயர்ந்தவர். அவர் அ.தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க சொல்லியுள்ளார். அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கடந்த 1½ மாதங்களாக அ.தி.மு.க.வில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் அதிகளவில் இணைகின்றனர். புதிய உறுப்பினர்கள் அதிகளவில் அ.தி.மு.க.வில் சேர விரும்புகின்றனர்

புதிய நிர்வாகிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யாமல் உள்ளார். எந்த திட்டமும் நடைபெறாமல் நடக்கும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி. இந்த ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்ந்துள்ளது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசு. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் கிடையாது.

அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சாலைகள், பாலங்கள், கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 407 பூத் கமிட்டிகள் உள்ளன. அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடியார் முதல் -அமைச்சராக வருவார்"

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்