வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

Update: 2022-12-15 18:45 GMT

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா என்கிற செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை என்று கூறினார்கள். இதுவரை அதனை கொடுக்கவில்லை.

மின்கட்டணம் 52 சதவீதம் உயர்வு

இளம்பெண்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொடுத்த திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி உள்ளனர். மின் கட்டணத்தை குறைப்போம் என்று கூறிவிட்டு தற்போது 52 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் 6 சதவீதம் மின் கட்டணம் அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர பால் விலை, சொத்து வரி உயர்வாலும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குப்பை வரி என்று புதிதாக தொடங்கி மாதம் ரூ.30 முதல் ரூ.50 வரை வசூல் செய்கின்றனர்.

பாடம் புகட்டுவார்கள்

மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சந்துக்கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி தி.மு.க. அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி மீது உள்ள கோபத்தால் எங்களது ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு விடை கிடைக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு அவர்களது குடும்பத்தில் உள்ளதால் அமைச்சர் பதவி கொடுத்து உள்ளார்கள் என்றார்.

இதில் அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ, மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி, நகர செயலாளர் சிவசிதம்பரம், நகர அவை தலைவர் விஜய்பாபு, மாவட்ட கவுன்சிலர் ருத்ராதேவி, முன்னாள் நகர செயலாளர் ஆட்டோராஜா உள்பட சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்