நாமக்கல் மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

நாமக்கல் மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு;

Update:2022-10-17 00:15 IST

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

நாமக்கல் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. நகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பி.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். சேகர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் சிறிது தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சிலர் தி.மு.க.வுடன் கைகோர்த்து கொண்டு, அ.தி.மு.க.வை அழித்து விட்டால் நம் மீது வழக்கு வராது என தி.மு.க.வின் பி டீம்மாக செயல்பட்டு கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டதே தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவித்து தான். அந்த எதிர்ப்பில் கொஞ்சம் கூட பின்வாங்க கூடாது என நினைத்து, தி.மு.க.வை எதிர்க்கின்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

வேதவாக்கு

கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டோம். நாமக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லும் வகையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தை நடத்தி நிரூபிக்க வேண்டும். இது தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களை நம்பி இருக்கின்ற இயக்கம்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டிவிட்டு செல்லவில்லை. ஒரு தொண்டன் கூட இந்த இயக்கத்தை வழிநடத்துவார் என்றுதான் சொல்லிவிட்டு சென்றார். அதுதான் இன்றைய தினம் வேதவாக்காக நடந்து கொண்டிருக்கிறது.

வருகிற 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியை மற்ற 40 தொகுதிகளை காட்டிலும், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக உருவாக்கி காட்ட வேண்டும். பொய்யான வாக்குறுதியை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டனர். ஆட்சிக்கு வந்த பின், அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

சவாலை ஏற்க தயார்

கடந்த 10 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யவில்லை. நாங்கள் 1½ ஆண்டில் எத்தனை திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம் என தி.மு.க. எம்.பி., பேசி இருக்கிறார். நீங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று என்னிடம் கேட்டிருக்கின்றார். நான் சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் ஒரு மேடை அமைப்போம். நானும், அவரும் இருக்கிறோம்.

10 ஆண்டு காலத்தில் அ.தி.மு.க. செய்த சாதனையை சொல்கிறேன். இந்த 1½ ஆண்டுகளில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர் சொல்ல வேண்டும். இல்லையென்றால் சட்டப்போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க.வினர் எதற்கும் பயந்தவர்கள் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ்.காளியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா என்கிற செல்வகுமார், நகர அவைத்தலைவர் விஜய்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவசிதம்பரம், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா, நல்லிபாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்