தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இதுகுறித்து நெல்ைல மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேட்டை, அம்பை, ராதாபுரம் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஐ.டி.ஐ. சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இணையவழி விண்ணப்பத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள எந்த தொழிற்பயிற்சி நிலையத்திலும் சேர்க்கை பெறலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் விவரங்கள், தொழிற்பிரிவுகள், தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு போன்றவை விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது.
கல்வி உதவித்தொகை
அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தற்போதைய விதிகளின்படி பயிற்சியின்போது லேப்டாப், சைக்கிள், ஆண்டுக்கு 2 சீருடை, ஒரு ஜோடி காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் இலவசமாக வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் இலவச பஸ்பாஸ், சலுகை விலை ரெயில்பாஸ் வழங்கப்படும்.
10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் மட்டும் எழுதி 12-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல் 8-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடம் எழுதி 10-ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.
அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுப்பணி, முன்னணி அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.