ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன தொழில்முனைவோர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன தொழில்முனைவோர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோருக்காக பிரத்யேக அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீத வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய அவசியமில்லை. தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான இலவச சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். தொழில் ஆலோசனைகள், கடன் பெறுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். இதற்கு தகுதியும், ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் இன தொழில் முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாக அல்லது 89255 33976 என்ற செல்பேசி எண்ணில் அணுகலாம். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் இம்மாதம் 30-ந்தேதி மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.