போதுமான அளவுக்கு உலர்களங்களை ஏற்படுத்த வேண்டும்
கிராமப்புறங்களில் போதுமான அளவுக்கு தானிய உலர்களங்களை ஏற்படுத்த வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம்
குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துக்கு கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் என்பது கூடுதலாக கிடைத்து வருகிறபோதிலும் சில சமயங்களில் குறைந்தழுத்த மின்சாரம் வருவது நீடிக்கிறது. அதற்கு, சில இடங்களில் மின்மாற்றியை மாற்றியமைத்தால் சீரான மின்சாரம் கிடைக்கும். காட்டுப்பன்றிகளால் சேதமடையும் பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும். வரும் காலம் மழைக்காலம் என்பதால் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வகையில் நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார முன்னுரிமை வழங்க வேண்டும்.
அணைக்கட்டுகளை சீரமைக்க
நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பனமலைப்பேட்டை ஏரி வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும். ஆழாங்காலில் இருந்து சிறுவந்தாடு ஏரிக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் 5 கி.மீ. தூரத்துக்கு தூர்வார வேண்டும். தென்பெண்ணையாற்றில் உடைந்து சேதமடைந்த எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டை புதுப்பித்து கட்ட வேண்டும். விக்கிரவாண்டி வேளாண்துறை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது தீர்வு கண்டு விரைவில் பட்டா மாற்றம் செய்துதர வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பசுந்தாள் விதை
பெரப்பந்தாங்கல் பகுதியில் உள்ள வயல்வெளி சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும். விக்கிரவாண்டி தாலுகாவில் நிலமே இல்லாத 3 பேருக்கு பட்டா வழங்கியது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வட்டார வேளாண் அலுவலகத்திலும் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் திருக்கை கிராமத்தில் உள்ள உலர்களத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேதம் அடைந்துள்ள தானிய உலர்களங்களை சீரமைத்துத்தர வேண்டும். கிராமப்புறங்களில் போதுமான அளவுக்கு தானிய உலர்களங்களை ஏற்படுத்தித்தர வேண்டும்.
தாழ்வாக செல்லும் மின்கம்பி
கெடாரில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும். விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காராமணி பயிருக்கு நியாயமான விலை கிடைக்க வியாபாரிகள், அதிகாரிகள், விவசாயிகளை அழைத்து முத்தரப்பு கூட்டம் நடத்தி கலந்தாலோசனை செய்ய வேண்டும். கோட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். சிறுவந்தாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
நிதி ஒதுக்கீடு
இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் சி.பழனி பேசுகையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்ட நபார்டு வங்கி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும். நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதேபோல் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும் என்றார்.