செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை வைத்தது. இதை ஏற்று விசாரணை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-01-27 18:45 GMT

ஊட்டி, 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை வைத்தது. இதை ஏற்று விசாரணை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதன்படி மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்தநிலையில் நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ்சாமி ஆகிய 6 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆஜரானார்.

இதையடுத்து அரசு தரப்பில் வழக்கு தொடர்பான செல்போன் பதிவுகளை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

கூடுதல் அவகாசம்

இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை நடந்த வழக்கு விவரங்கள் குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் செல்போன் பதிவுகள் சம்பந்தமாக விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது என்றார்.

இதேபோல் வக்கீல் கனகராஜ் கூறுகையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்