போக்குவரத்து விதிமீறல்களுக்கு கூடுதல் அபராதம்: ஊட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனை
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஊட்டி
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அபராதம் அதிகரிப்பு
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. இதன்படி பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
தீவிர வாகன சோதனை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் லவ்டேல் சந்திப்பு, சேரிங்கராஸ், மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் போலீசார் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் அபராத தொகை வசூலிப்பதால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் போலீசுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் அறிவுரை
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மோட்டாா் வாகனச் சட்டம் திருத்தம்-2019-இன்படி 46 வகை விதிமுறை மீறல்களுக்கு அபராதம் உயா்த்தப்பட்டு உள்ளது. மோட்டாா் வாகனச் சட்டம் திருத்தத்தின்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.இதேபோல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டினால் ரூ.1,000, சிக்னலை மீறினால் ரூ.500, சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் ரூ.20,000 என அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது.
இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக ரூ.2,000 அபராதம் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுமக்களில் ஏராளமானவருக்கு இது குறித்து தெரியாததால் முதலில் அறிவுரை கூறுகிறோம், அதை மீறினால் அபராதம் விதிக்கிறோம் என்றனர்.