இயற்கை பேரிடர்களை சமாளிக்க அரசு அலுவலர்களுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்க வேண்டும்0கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

இயற்கை பேரிடர்பாடுகளை சமாளிக்கும் வகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒத்திகை பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

Update: 2023-01-20 18:45 GMT

ஊட்டி

இயற்கை பேரிடர்பாடுகளை சமாளிக்கும் வகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒத்திகை பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை தொடர்பாகவும், இ-ஆபிஸ் பணிகள் தொடர்பாவும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நீலகிரி மாவட்டம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

வருவாய் நிர்வாக ஆணையாளரும், கூடுதல் தலைமை செயலாளருமான பிரபாகர் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் மழை காலங்களில் மழையினால் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் தற்பொழுது நடைபெற்று வரும் பணிகளை மழை காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகளில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் சீரிய முறையில் செயல்படும் வகையில், தொடர்ந்து ஒத்திகை பயிற்சிகள் அளிக்க வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வருவாய்த்துறையின் சார்பில், அரசு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள பதாகை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகளை பார்வையிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பதிவேடுகள் வைப்பு அறை, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் மற்றும் இ - சேவை மையத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். இதன் பின்னர் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் மரக்கன்று நட்டார்.

இதில், சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிக்காராணா, மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்