பல்லடம் - உடுமலை இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

பல்லடம் - உடுமலை இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-03-31 10:25 GMT

பல்லடம்

பல்லடம் - உடுமலை இடையே க கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ்கள்

பல்லடம்- உடுமலை இடையே குறிப்பிட்ட அளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், கிராமப் பகுதிகளில் போதுமான பஸ் வசதி இல்லை எனவும், எனவே கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-

பல்லடம் - உடுமலை வழித்தடத்தில் பல்லடம் நகரம் மற்றும் 50-க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. நுாற்பாலை மில்கள், பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, இங்குள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பூர், பல்லடத்துக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ் வசதியும் குறைவாகவே உள்ளது. இடைபட்ட பகுதியிலுள்ள அரசுப்பள்ளிகளுக்கு செல்லும், மாணவர்களும், திருப்பூர் பஸ்களிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு பொதுமக்களும், அலுவலர்களும் இந்த வழியாக திருப்பூருக்கு சென்று வருகின்றனர். தொழில், கல்வி, நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக இருப்பதால் பல்லடம் - உடுமலை ரோடு மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை.

கோரிக்கை

பொதுமக்களின் தொடர் கோரிக்கை அடிப்படையில், உடுமலையில் இருந்து, 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ்கள் மட்டும் திருப்பூருக்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் உடுமலை பஸ் நிலையம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பல்லடம் நிலையம் ஆகிய இடங்களில் மட்டும் நிறுத்தப்படும். இதனால், உடுமலை - திருப்பூர் செல்பவர்கள் பயன் அடைந்தாலும் பல்லடம் வழித்தட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு போதிய பஸ் வசதி கிடைக்கவில்லை. எனவே காலை, மாலை நேரங்களில், பல்லடம் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மிகுந்த சிரமப்படுகிறோம். குறிப்பாக, மாணவர்கள், தொழிலாளர்கள் நாள்தோறும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். இதனால் பல்லடம் - உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்