சீமான் மீதான புகார் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜய லட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு திருவள்ளூர் கோர்ட்டில் விஜயலட்சுமி ஆஜரானார். அப்போது குற்றசாட்டு மீதான ஆவணங்களை கோர்ட்டில் சமர்பித்தார்.

Update: 2023-09-02 01:54 GMT

திருவள்ளூர்,

நடிகர் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து நேற்றுமுன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

மதியம் 1.30 மணியளவில் கோர்ட்டில் ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் மாலை 4.30 வரை வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி கோர்ட்டு வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 'நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கைது செய்ய வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி சமர்ப்பித்து உள்ளார்' என தெரிவித்தார்.

விசாரணை முடிந்து நடிகை விஜயலட்சுமி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தார். இதையடுத்து மதுரவாயலில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சிரித்த முகத்துடன் வெளியே வந்த விஜயலட்சுமியிடம், 'விசாரணை எப்படி இருந்தது?' என நிருபர்கள் கேட்டதற்கு, இரண்டு கைகளை உயர்த்தி வெற்றி குறி காட்டிவிட்டு, இருகைகளை கூப்பி நன்றி தெரிவித்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்