படத்துக்கு சான்றிதழ் பெற 'சென்சார் போர்டு' அதிகாரிகளுக்கு ரூ.6½ லட்சம் லஞ்சம் -நடிகர் விஷால் புகார்

படத்துக்கு சான்றிதழ் பெற ‘சென்சார் போர்டு' அதிகாரிகளுக்கு ரூ.6½ லட்சம் லஞ்சம் நடிகர் விஷால் புகார்.

Update: 2023-09-28 20:44 GMT

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த 'மார்க் ஆண்டனி' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்று வசூலும் குவித்து வருகிறது.

மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.50 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஷால் நேற்று தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"திரைப்படத்தில் ஊழலை காட்டுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களிலேயே நடைபெறும் ஊழலை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த ஊழல், மும்பையில் உள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவில் அதிகமாகவே நடக்கிறது என்பதுதான் மோசமான விஷயம்.

எனது 'மார்க் ஆண்டனி' படத்தின் இந்தி பதிப்பிற்கு 2 தவணைகளாக ரூ.6.50 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரைப்படத்தை திரையிட்டு காட்ட ரூ.3 லட்சம் மற்றும் தணிக்கை சான்றிதழுக்கு ரூ.3.50 லட்சம் கொடுக்க வேண்டியதாக இருந்தது.

லஞ்சம் கொடுத்தால்தான் படத்தை திரைக்கு கொண்டுவர முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்.

எனது சினிமா பயணத்தில் இதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே கிடையாது. இந்த விவகாரத்தில் இடைத்தரகருக்கு பணம் தருவதை தவிர வேறு வழியில்லை.

இந்த விஷயத்தை மராட்டிய மாநில முதல்-மந்திரி, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இதை செய்வது எனக்காக அல்ல, எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணத்தை லஞ்சமாக கொடுப்பதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்