உயர் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்: விமான நிலையத்தில் கண்ணீர் பேட்டி

உயர் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் கண்ணீர்மல்க பேட்டி அளித்தார்.

Update: 2022-06-14 22:09 GMT

ஆலந்தூர்,

பிரபல நடிகரும், டைரக்டருமான டி.ராஜேந்தருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் (மே) சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரித்தார்.

அமெரிக்கா பயணம்

இதற்கிடையே டி.ராஜேந்தருக்கு உயர்சிகிச்சை அளிக்க இருப்பதாகவும், அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவரது மகன் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார். இதன்படி விமானம் மூலமாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டார்.

இதற்காக நேற்று மாலை டி.ராஜேந்தர் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அவருடன் அவரது மனைவி உஷாவும் உடன் இருந்தார்.

விமான நிலையத்தில் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதையும் மூடி வைத்ததில்லை

இப்போது நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது.

என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜி.கே.வாசன், பச்சமுத்து, நடிகர் கமலஹாசன், ஐசரி கணேஷ் உள்பட பலருக்கும் நன்றி தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் ஆறுதல்

எல்லாவற்றையும் விட என் தாய் கழகம் தாய் வீடு தி.மு.க. தலைவர் அரசியல் ஆசான், அரசியல் குரு மறைந்து விட்ட கருணாநிதியின் புதல்வர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறுக்க முடியாது. இரு முறை தனது குடும்பத்துடன் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார்.

என் மீது அன்பும், பாசமும் காட்டக்கூடிய ஒரே தலைவர் கருணாநிதிதான் என நினைத்தேன். அவருக்கு பின் முதல்வர் என் மீது அன்பு காட்டுவார் என பார்க்கும்போது உண்மையில் இதற்கு முன் இருந்ததை விட என் மனதில் உயர்ந்து இருக்கிறார்.

வதந்திகளை நம்பாதீர்

என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்.

நான் வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன்தான். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்