நடிகர் போஸ் வெங்கட்டின் அக்காள்-அண்ணன் மரணம்
நடிகர் போஸ் வெங்கட்டின் அக்காள்-அண்ணன் மரணமடைந்தனர்.
அறந்தாங்கி:
நடிகர் போஸ் வெங்கட்டின் அக்காள்-அண்ணன் மரணம்
'மெட்டி ஒலி' தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். 'கன்னிமாடம்' என்ற படத்தையும் இயக்கினார்.
அக்காள் மரணம்
போஸ் வெங்கட்டின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள பாண்டிபத்திரம் என்ற கிராமம் ஆகும். இவரது அக்காள் வளர்மதி (வயது 54). இவர் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் வசித்து வந்தார். இவரது கணவர் குணசேகரன் ஆட்டோ ஓட்டி வருகிறார். போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதன் (52). இவர் அறந்தாங்கியில் வசித்து வந்தார். இதற்கிடையே வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதன் மற்றும் குடும்பத்தினர் அறந்தாங்கியில் இருந்து சென்னை வந்தனர்.
அண்ணனும் மரணம்
வளர்மதி உடலை பார்த்து ரங்கநாதன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தபடி கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். ஆனால் வழியிலேயே ரங்கநாதன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சோகத்தில் மூழ்கிய குடும்பம்
ஏற்கனவே அக்காளை இழந்த சோகத்தில் இருந்த போஸ் வெங்கட்டுக்கு, அண்ணனும் மரணம் அடைந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து 2 உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் ஒட்டுமொத்த குடும்பமே நிலைகுலைந்து துக்கத்தில் மூழ்கியது.வளர்மதி உடலுக்கான இறுதிச்சடங்குகள் சென்னையில் நடந்தது. ரங்கநாதன் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடல் தகனம்
சமூக சேவையில் ஈடுபட்டு வந்த ரங்கநாதன், அறந்தாங்கியில் ஒரு அறக்கட்டளையின் பெயரில் ஜீவன் ஆலயம் எனும் மின்தகன மையத்தை அமைத்திருந்தார். அந்த மின் தகன மையத்திலேயே ரங்கநாதனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இறந்த ரங்கநாதனுக்கு ஹேமமாலினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அக்காள், அண்ணனை அடுத்தடுத்து பறிகொடுத்த போஸ் வெங்கட்டுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.