கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.
சுற்றுலாத்துறை
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஓசூர் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
மேலும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை பார்வையிட்டார். அவருடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் சரயு, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன் (பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
ஆய்வின் போது அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
22 மாவட்டங்களில் ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நேரில் சென்று உணவகங்களில் ஆய்வு செய்து வாழை இலையுடன் அறுசுவை உணவுகள் வழங்க ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் இதுவரை 22 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓட்டல்களில் தங்கும் அறைகள், கழிப்பறைகள், குளிர்சாதன வசதிகள், கட்டில், மெத்தை, பர்னிச்சர் பொருட்கள் விடுதிகளில் தங்கும் நபர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ரூ.63 லட்சத்தில் பராமரிப்பு பணிகள்
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்களில் பணிபுரியும் சமையல் கலைஞர்களுக்கு உணவுகளை ருசியாகவும் சுவையாகவும் சமைத்து தர பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாதம் ஒரு முறை ஓட்டல் மேலாளர்களை அழைத்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து தனியார் ஓட்டல்களுக்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் குறைகள் இருப்பின் இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓசூரில் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தமிழ்நாடு சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் விடுதி அறைகள் பராமரிப்பு பணிகள், நுழைவு வாயில் அமைக்கும் பணிகள், உணவகம் உள்ளிட்டவைகள் சீரமைக்கப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேம்படுத்த நடவடிக்கை
மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள படகு இல்லம் சுற்றுலா துறையின் மூலம் மேம்பாடு செய்வதற்காக கருத்துரு தயார் செய்து, அரசிற்கு பரிந்துரைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2020-ம் ஆண்டில் 14 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2021-ம் ஆண்டில் 16 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2022-ம் ஆண்டில் 20 லட்சம் சுற்றுலா பயணிகளும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 12 லட்சம் சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதி, இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அப்பகுதிகள் மேம்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் சிறப்பாக உள்ளது என்று கூறும் அளவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திர குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் ரவி, தாசில்தார்கள் சம்பத் (கிருஷ்ணகிரி), சுப்ரமணி (ஓசூர்), ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் வசந்தன், உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.