காற்றாடி திருவிழா அடுத்த ஆண்டும் நடத்த நடவடிக்கை

குமரியில் நடந்த காற்றாடி திருவிழா பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டும் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-08-06 18:45 GMT

நாகர்கோவில்:

குமரியில் நடந்த காற்றாடி திருவிழா பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டும் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

காற்றாடி திருவிழா

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் காற்றாடி திருவிழா கன்னியாகுமரி கடற்கரையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினம் சங்குதுறை கடற்கரையில் காற்றாடி திருவிழா நடந்தது. விழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்த காற்றாடி இயக்குபவர்கள் பல வண்ண காற்றாடிகளை கடற்கரையில் பறக்கவிட்டனர். இதனை சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

3-வது நாளாக நேற்று சங்குத்துறை கடற்கரையில் காற்றாடி திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நேற்று மதியம் 2.30 மணிக்கு முதன்முதலில் வாழ்க தமிழ் என்ற ஒரு வசனத்துடன் காற்றாடி பறக்க விடப்பட்டது. தொடர்ந்து பந்தய குதிரை, திமிங்கலங்கள், புப்பட் என்னும் புழு, கார்ட்டூன் நட்சத்திரங்கள் ஆகிய பலூன்கள் லிப்டர் வசதியுடன் பறக்கவிடப்பட்டன. இப்படி கடற்கரையில் 12 காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன.

குடும்பம் குடும்பமாக வந்த மக்கள்

நேற்று விடுமுறை தினம் என்பதால் காற்றாடி திருவிழாவை காண நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து கண்டுகளித்தனர். அதிலும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கூட்டமாக வந்து பலூன்கள் முன்பு தங்களது செல்போனில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து மகிழ்ந்தனர். அதேசமயம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கடல் அலைகளோடு ஓடி விளையாடினர்.

சங்குதுறை கடற்கரையில் நேற்று நடைபெற்ற காற்றாடி திருவிழா நிறைவு நாளில் கலெக்டர் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது அவர் பலூன்கள் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நல்ல வரவேற்பு

தமிழகத்தில் முதன்முதலாக மாமல்லபுரத்தில் காற்றாடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. தற்போது குமரி மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து 3 நாட்கள் நடத்திய காற்றாடி திருவிழா இன்றுடன் (நேற்று) நிறைவடைந்தது. இதில் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த விழா பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அடுத்த ஆண்டும் காற்றாடி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மொத்தம் 37 பலூன்கள் கடற்கரையில் பறக்க விட திட்டமிடப்பட்டது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் குறைவான காற்றாடிகளே பறக்க விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசல்

காற்றாடி திருவிழாவை காண நேற்று சங்குத்துறை கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் வந்திருந்த கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிளை கடற்கரை பகுதிகளில் அணிவகுத்து நின்றன. இதனால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்