விநாயகர் சதுர்த்தி விழாவில்அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை :சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
திருக்கோவிலூர்,
முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் போது பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து கொண்டாடுவது வழக்கம். அதன்படி, திருக்கோவிலூர் பகுதியிலும், சிலை அமைக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், சிலை அமைப்பாளர்கள் மற்றும் இந்து சமய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருக்கோவிலூர் மனோஜ் குமார், உளுந்தூர்பேட்டை மகேஷ், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் தாசில்தார் பசுபதி வரவேற்றார்.
கடும் நடவடிக்கை
கூட்டத்தில் கோட்டாட்சியர் கண்ணன் பேசுகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்தாண்டு எங்கெங்கு சிலை வைக்க அனுமதிக்கப்பட்டதோ அதே இடத்தில் மட்டும் இந்தாண்டும் சிலை வைக்க அனுமதிக்கப்படும். சிலை வைக்கும் பொறுப்பாளர்கள் அதன் பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். கண்டிப்பாக 10 அடி உயரத்திற்கு மேல் சிலை வைக்கக் கூடாது. சிலை வைக்கின்ற இடத்திற்கு கண்டிப்பாக அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி பெற வேண்டும்
சிலை வைக்கும் இடத்திற்கு தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும். குறிப்பிட்ட தேதியில் சிலைகளை அமைதியான முறையில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், சிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் நன்றி கூறினார்.