சேதமடைந்த மதகின் உதிரிபாகங்களை பணிமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

பரம்பிக்குளம் அணையின் சேதமடைந்த மதகின் உதிரிபாகங்கள் பணிமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-09-28 18:45 GMT

பொள்ளாச்சி, 

பரம்பிக்குளம் அணையின் சேதமடைந்த மதகின் உதிரிபாகங்கள் பணிமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதிரிபாகங்கள்

பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் அணை முழுகொள்ளளவை எட்டியது. இதற்கிடையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் சோலையாரில் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரும்பு சங்கிலி அறுந்து பீம் (சுவர்) இடிந்து விழுந்ததில் மதகு சேதமடைந்தது. இதை தொடர்ந்து நீரின் அழுத்தம் காரணமாக மதகு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக தொடர்ந்து மதகு வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இதற்கிடையில் சேதமடைந்த மதகின் உதிரிபாகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நிதி ஒதுக்கீடு

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் புதிதாக மதகு அமைக்க அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிலையில் அணையில் மதகு பொருத்தப்பட்டு இருந்த பகுதியில் உள்ள உதிரிபாகங்களும் சேதமடைந்து உள்ளன. இதன் காரணமாக அந்த உதிரிபாகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக உதிரிபாகங்களை பணிமனைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவழைக்கு முன்பாக அணையின் புதிதாக மதகு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து மதகு மற்றும் சர்க்கார்பதிக்கு சேர்த்து வினாடிக்கு 3669 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உள்ளது. மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவது நின்ற பிறகு மதகு சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்