தென் மாவட்டங்களில் இருந்து புதிய ரெயில்களை இயக்க நடவடிக்கை

தென்னக ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே கால அட்டவணையோடு அறிவிக்கப்பட்ட ரெயிலை இயக்கவும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-06-11 19:35 GMT

விருதுநகர்,

தென்னக ரெயில்வேயின் புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே கால அட்டவணையோடு அறிவிக்கப்பட்ட ரெயிலை இயக்கவும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கால அட்டவணை

ஆண்டுதோறும் ரெயில்வே நிர்வாகம் ஜூலை மாதம் புதிய கால அட்டவணையை வெளியிடுவது வழக்கம். இந்த கால அட்டவணையில் புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பும் மற்றும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு காரணமாக புறப்படும் மற்றும் சேரும் நேரங்களில் மாற்றம் ஆகியவையும் இடம் பெறும்.

தென் மாவட்ட மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் புதிய ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயக்கப்படாத நிலை

ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்றும் அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த ரெயில் இயக்கப்படவில்லை. பலமுறை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது.

மேலும் கடந்த 2002-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட கொல்லம்- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் செங்கோட்டையில் இருந்து பெங்களூருவிற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டியது அவசியமாகும். எனவே இப்பகுதி எம்.பி.கள் இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி இந்த ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பலனில்லை

விருதுநகர், மானாமதுரை இடையே ரூ.270 கோடி மதிப்பீட்டில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு காமராஜர் பிறந்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் இந்த வழித்தடத்தில் புதிதாக எந்த ரெயிலும் இயக்கப்படாத நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கப்பட வேண்டும் என்று எம்பிக்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வற்புறுத்தியும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இம் முறையாவது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கும் வகையில் கால அட்டவணை தயாரித்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நெல்லையில் இருந்து ஈரோட்டிற்கான பயணிகள் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எனவே அதனையும் வரும் மாதம் முதல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்