வேடசந்தூரில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை; பேரூராட்சி தலைவர் தகவல்

வேடசந்தூரில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

Update: 2023-06-23 21:00 GMT

வேடசந்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வேடசந்தூரில், மாரம்பாடி சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதேபோல் அந்த குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அருகில் உள்ள காமராஜர்நகர், வசந்தாநகர், பாத்திமாநகர், மைனர்காலனி, யூசுப்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து குப்பைகளை தரம்பிரித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நேற்று குப்பைக்கிடங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் சாகுல்ஹமீது, வார்டு கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கற்பகம் வேல்முருகன், கலாராணி பன்னீர்செல்வம், சரவணகுமார், யாஸ்மின் ரியாஜூதீன், சம்சுநிஷா பக்ருதீன், அன்சர் மைதீன், தில்ஷாத் பேகம் காட்டுபாவாசேட், கமலக்கண்ணன், கீதா பாலகிருஷ்ணன், வக்கீல் சூர்யா செல்வகுமார், ராணி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கூறுகையில், வேடசந்தூர் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், குப்பைகளை தரம்பிரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன், சிமெண்டு தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் பேரூராட்சிக்கு வருமானம் கிடைப்பதுடன், குப்பைக்கிடங்கு தூய்மையாகும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்