பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ.38 கோடியில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை - ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ.38 கோடியில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி அதிகாரிகளுக்கு எதிராக சேகர் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "பெத்தேல் நகரில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. குடியிருப்புவாசிகளுக்கு மாற்று வீடுகள் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது"என்றார்.
பின்னர் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், "மொத்தமுள்ள 1,436 ஆக்கிரமிப்பாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.38 கோடி செலவில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.29 கோடியையும் ஒதுக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், 926 பேருக்கு வீடுகள் தயாராக உள்ளன. எஞ்சிய 510 பேருக்கும் இந்தாண்டு டிசம்பருக்குள் வீடுகள் ஒதுக்கப்படும்"என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த அறிக்கைக்கு மனுதாரர் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.