பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க நடவடிக்கை

வருகிற 25-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றி பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க நடவடிக்கை எடுப்பது என்று சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-31 19:42 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி அருகே பொன்னாலகரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்களும், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுங்கச்சாவடி திறக்கவில்லை.

இது தொடர்பாக சமாதான கூட்டம் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 4-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் பழைய சாலைகளை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும், சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து தர வேண்டும், நெய்வேலி நிலக்கரி கன்வேயர் பெல்ட் செல்லும் மேம்பாலத்தில் இருவழி தட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கூறினர். அதற்கு மே மாதம் 31-ந் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நேற்றுடன் அவர்கள் கொடுத்த கால அவகாசம் முடிவடைந்தது.

சுங்கச்சாவடியை திறக்க நடவடிக்கை

இந்த நிலையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், விருத்தாசலம் தாசில்தார் தனபதி, நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன், விருத்தாசலம் நகர செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள், பொன்னாலகரம், ஊ.மங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 25-ந் தேதிக்குள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின் சுங்கச்சாவடியை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்