முந்திரி பயிர்களுக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை

முந்திரி பயிர்களுக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-06-23 19:43 GMT

மரக்கன்றுகள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மண்ணுளி கிராமத்தை சேர்ந்த செந்தில் பேசுகையில், தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளை கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் அழைத்து சென்றனர். அங்கு பயிரிடப்பட்டிருந்த தோட்டக்கலை பயிர்களை நாங்கள் பார்வையிட்டு அதேபோல் இங்கும் பயிர் செய்துள்ளோம். அந்த பயணம் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. மாவட்டத்தில் தற்போது மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 மரங்களாவது ஆலமரம், அரசமரம், பனைமரம் இருக்க ஆவண செய்ய வேண்டும், என்றார்.

மக்காச்சோள பயிர்கள்

மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலசிங்கம் பேசுகையில், எங்கள் ஊரில் பலர் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். அதில் ஒருவரது வயலில் மக்காச்சோளத்தில் பூச்சி தாக்காமல் இருப்பதற்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் பூச்சி மருந்து வாங்கி அடித்துள்ளார். ஆனால் பூச்சிகள் சாவதற்கு பதில் சோளச்செடி கருகிவிட்டது. இது பற்றி அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தோம். ஆனால் அந்த விற்பனை நிலையத்தில் இருந்து அவர்கள் எந்த விதமான தகவலும் தரவில்லை என்று கூறினார்.

இதையடுத்து தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த மக்காச்சோள பயிர்களை கலெக்டரிடம் காட்டினார்கள். இதையடுத்து கலெக்டர், வேளாண் அலுவலர்களை அழைத்து இது பற்றி கேட்டார். அதற்கு அலுவலர்கள், அந்த வயல் பகுதியில் ஆய்வு செய்ததாகவும், சம்பந்தப்பட்ட கடையில் உள்ள பூச்சி மருந்துகள் தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தூர்வார வேண்டும்

ஆண்டிபட்டாக்காடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் பேசுகையில், எங்கள் ஊரில் கொள்ளிடம் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அதனை சரி செய்ய வேண்டும். மேலும் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளில் மரக்கன்றுகள் நட வேண்டும். கிராமங்களில் கால்நடைகள் திருடப்படுகிறது. அதை தடுக்கவும், திருடர்களை கண்டுபிடிக்கவும் கிராம ஊராட்சி சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், என்றார்.

பரணம் கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி பேசுகையில், முந்திரி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலன் கருதி, அந்த பயிர்களுக்கும் காப்பீடு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். செந்துறை மற்றும் குமிழியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விஷக்கடிகளுக்கான மருந்துகளை இருப்பு வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்