இலங்கை சிறையில் தவிக்கும் 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

Update: 2023-06-26 18:45 GMT

இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

5 மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடராஜன், நாகசாமி, தேவராஜ், சந்தியா அருளானந்தம் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் ஆகிய 5 பேரும் தடைக்காலம் முடிந்து விசைப்படகில் கடந்த 21-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை கைது செய்து படகுடன் இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். சி.ஐ.டி.யூ கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் 5 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் மாணவன் என்றும் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக மீன்பிடிக்க சென்றதாகவும் கூறினர்.

கலெக்டரிடம் கோரிக்கை

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அப்போது பாலிடெக்னிக் மாணவரின் தாய் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடன் வந்த மீனவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மயக்கம் தெளிய வைத்தனர். அந்த மனுவில், இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்