கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை-வனத்துறை அமைச்சர் தகவல்

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2023-09-10 18:30 GMT

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சரணாலயத்திற்கு வரக்கூடிய பறவைகளின் எண்ணிக்கை, பறவைகளின் இனங்கள், அதன் தாய் நாடு, ஏரியில் நீரின் இருப்பு, சுற்றுலா தலத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையடுத்து மேல கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள மத்திய நாற்றங்காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது

ரூ.1 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் கோரிக்கையை ஏற்று கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த மற்றும் சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்த புதிய, புதிய விஷயங்களை இங்கு கொண்டுவருவதற்காக ஆய்வு செய்ய வந்துள்ளோம். இந்த பறவைகள் சரணாலயம் 1,100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் ஆக்கிரமிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அதனை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் 75 ராம்சார் இடங்கள் உள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 14 இடங்களை ராம்சார் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 4 இடங்களை ராம்சார் இடங்களாக தேர்வு செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயமும் ஒன்று. எனவே இதனை விரைவில் ராம்சார் தலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்னா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, முதன்மை தலைமை வனக்காவலர் சுபரத் மொஹபத்ரா, தலைமை வனக்காவலர் சதிஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்