தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை; சபாநாயகர் பேச்சு
கழிவுகள் கலக்காமல் தடுத்து தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.
கழிவுகள் கலக்காமல் தடுத்து தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.
உலக ஆறுகள் தினம்
உலக ஆறுகள் தினத்தையொட்டி, நெல்லை நீர்வள சங்கமம் கருத்தரங்கு, பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் முன்னிலை வகித்தார். தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்துகளின் நீர்நிலைகளின் வரைபடம் மற்றும் நெல்லை நீர்வள தொகுப்பு கையேடுகளை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கழிவுகள் கலப்பதை தடுத்து...
ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றால், அதன் இருபுற கரைகளையும் அளவீடு செய்து கண்டறிந்து, அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 42 அணைகளில் 9 அணைகள் நெல்லை மாவட்டத்தில் கட்டப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நீர்வளம் அமைப்பு தொடங்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் தாமிரபரணி ஆறு சீர்படுத்தப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கே முன்னுதாரணமாக நெல்லை திகழ்கிறது.
பாபநாசத்தில் இருந்து நெல்லை வரை தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளை தடுத்து தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 18 மாதங்களில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் குடிக்க உகந்த தண்ணீராக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ராஜ்பகத் பழனிசாமி, மதிவாணன், வெங்கட்ராமன் சீனிவாசன், நெல்லை உழவார பணிக்குழாம் முத்துகிருஷ்ணன், அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் வெங்கட்ராமன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கு தாமிரபரணி ஆற்றின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.