மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை

வீட்டுமனை பட்டா வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் பாத்திமா தெரிவித்தார்.

Update: 2023-04-06 18:22 GMT

மனுநீதிநாள் முகாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கோட்ட அளவிலான சிறப்பு மனுநீதி நாள் முகாம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கந்திர்பாவை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை இடத்து துணை தாசில்தார் சமரபுரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளாராக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக்கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

வீடு கட்டிக்கொடுக்க

அப்போது வீடு இல்லாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வீட்டுமனை பட்டா வைத்திருந்து வீடு இல்லாத ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி கோட்ட அளவில் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே மாதந்தோறும் ஒரு முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் யுவராணி, குழந்தை தெரசா, அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன், தமிழ் படைப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கே.பி.பிரபாகரன், வெங்கடரமணன் மோகன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்