10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை சார்பில் நடந்த குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், காவல் துறை சார்பில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் நிலப்பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு, பண மோசடி, விபத்து, போக்குவரத்து உள்ளிட்ட 26 புகார் மனுக்கள் அவரிடம் வழங்கப்பட்டன.
அதில் திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் புரட்சி கொடுத்த மனுவில், ''மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் வாரச்சந்தை, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், உணவகங்கள் மத்திய அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.
நடவடிக்கை
சென்னை போன்ற பெருநகரில் 10 ரூபாய் நாணயம் அனைத்து பகுதிகளிலும் வாங்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் இதேநிலை நீடிப்பதால் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயம் செல்லாத பணமாக மாறி வருவதால் காவல் துறையினர் இது தொடர்பான விழிப்புணர்வு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.இந்த மனு உள்பட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ் (திருப்பத்தூர்), சுரேஷ்பாண்டியன் (வாணியம்பாடி), சரவணன் (ஆம்பூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.