வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் 30 மனுக்களை அளித்தனர்.
பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வீட்டை எழுதி வாங்கினர்
வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த காந்தம்மாள் (வயது 78) அளித்துள்ள மனுவில், நான் எனது மருத்துவ செலவிற்காக பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்த தந்தை, மகனிடம் எனது வீட்டை அடமானமாக வைத்து ரூ.4 லட்சம் கடனாக கேட்டேன். அவர்கள் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் தந்துவிட்டு கடன் பத்திரத்தில் ரூ.4 லட்சமாக எழுதினர். இதுகுறித்து கேட்டதற்கு மீதி பணம் தருவதாக கூறி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி எனது வீட்டை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி
அணைக்கட்டு தாலுகா ஊசூர் அருகே சின்ன தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராதிகா என்பவர் அளித்துள்ள மனுவில், கடந்த 7.4.2022 அன்று பீரோவில் இருந்த 33 சவரன் நகை திருடப்பட்டு இருந்தது. அந்த நகைகளை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
வேலூர் நல்லான்பட்டரை சின்னதெருவை சேர்ந்த ஜெயச்சந்திர பாக்கியராஜ் உள்ளிட்ட 7 ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அளித்துள்ள மனுவில், எங்களை இந்தோனேசியாவிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக சலவன்பேட்டையை சேர்ந்த ஒருவர் தலா ரூ.22 ஆயிரத்து 500 வீதம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 500-ஐ கடந்த 24.12.2019 அன்று பெற்றுக்கொண்டார். இதுவரை எங்களை சுற்றுலா அழைத்து செல்லவில்லை. மேலும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.