விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்காவிட்டால் நடவடிக்கை

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விசாகன் அதிகாரிகளை எச்சரிக்கை செய்தார்.

Update: 2022-09-30 18:13 GMT


குறைதீர்க்கும் கூட்டம்


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் விசாகன் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயராணி, தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவி பாரதி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதில் விவசயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறித்து பேசினார். அதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-


சவடமுத்து:- நாகையகோட்டையில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் இனக்கவர்ச்சி பொறி வழங்க வேண்டும். கல்லுக்குளம் நிரம்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


முத்துசாமி:- சாணார்பட்டி ஒன்றியம் கவராயப்பட்டியில் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


கூடுதல் கலெக்டர்:- கால்நடை பராமரிப்பு துறை மூலம் முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


வீரப்பன்:- பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் ஏராளமான உள்ளது. அந்த நிலங்களில் மரம் வளர்க்க வேண்டும்.


கலெக்டர்:- பாளையத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து, அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தடையில்லா மின்சாரம்


தங்கவேல்:- குஜிலியம்பாறையில் குளத்தில் மதகு சேதமாகிவிட்டதால் தண்ணீர் முழுவதும் வீணாகி விடுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். விவசாயிகள் பலர் நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற விவசாயிகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.


கலெக்டர்:- பருவமழைக்கு முன்பு குளங்களில் பழுதான மதகுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு, அரசு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும்.


பழனிவேல்:- உழவு, உரம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுமா?


இணை இயக்குனர்:- உழவுக்கு மானியம் இல்லை. விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


பொம்முராஜ்:- ரெட்டியார்சத்திரம் பகுதியில் விவசாயத்துக்கு முழுமையாக தடையின்றி மின்சாரம் கிடைப்பதில்லை. டிரான்ஸ்பார்மர் பழுதானால் ஒரு வாரம் கழித்து தான் சரிசெய்யப்படுகிறது.


கலெக்டர்:- விவசாயத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். டிரான்ஸ்பார்மர் பழுதனால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


சுந்தரராஜ்:- காவிரி ஆற்றில் மழைக்காலத்தில் வீணாக செல்லும் தண்ணீர் பம்பிங் முறையில் கொண்டு வந்து குளங்களில் நிரப்ப வேண்டும்.


கூடுதல் கலெக்டர்:- காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து 100 குளங்களை நிரப்பும் வகையில் திட்டம் தயாரிக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்