நீரோடைகளை ஆக்கிரமித்து தடுப்பணை கட்டியவர்கள் மீது நடவடிக்கை-உதவி கலெக்டர் தகவல்
செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் நீரோடைகளை ஆக்கிரமித்து தடுப்பணை கட்டிடயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் கங்காதேவி தெரிவித்தார்.
கடையநல்லூர்:
செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் நீரோடைகளை ஆக்கிரமித்து தடுப்பணை கட்டிடயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் கங்காதேவி தெரிவித்தார்.
நீர்வீழ்ச்சிகள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் வனப்பகுதிகளில் இருந்து நீரோடைகள் பாய்ந்து அடவிநயினார் அணை மற்றும் பண்பொழி, இலத்தூர், சீவநல்லூர், கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு செல்கிறது. இந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மேக்கரை பகுதியில் நீர் வழித்தடங்களை சிலர் தடுப்பணை போல் அமைத்து அதை நீர்வீழ்ச்சிகளாக உருவாக்கி உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணங்கள் வசூல் செய்து அதில் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அந்த தண்ணீரில் சோப்பு உள்ளிட்ட கழிவுகள் கலந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் ஏராளமான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு வீசப்படுவதால் விவசாயிகள், வனவிலங்குகளின் கால்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது வடகரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் தென்காசி கலெக்டரிடம் முறையிட்டனர்.
உதவி கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மேக்கரை பகுதியை ஒட்டி உள்ள நீரோடைகளில் கட்டியுள்ள தடுப்பணைகள் குறித்து ஆய்வு ெசய்து விசாரணை நடத்தினர்.
அப்போது 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளில் தடுப்பணை கட்டி அதை நீர்வீழ்ச்சிகளாக கட்டண அடிப்படையில் சுற்றுலா பயணிகளை குளிக்க பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
நடவடிக்கை
இதுகுறித்து உதவி கலெக்டர் கங்காதேவி கூறுகையில், 'இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அளிக்கப்படும். அதன் பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.